தேயிலை வாரியத்தின் பயன்கள் பெற அழைப்பு
பந்தலுார்; பந்தலுார் அருகே படச்சேரி பகுதியில் செயல்படும் அம்பேத்கர் சிறு, குறு விவசாயிகள் சங்க உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, தேயிலை வாரியத்தின் சார்பில் நடந்தது.செயலாளர் ராஜன் வரவேற்றார். தேயிலை வாரிய வளர்ச்சி அலுவலர் வருண்மேனன் பேசுகையில், ''தேயிலை தொழிற்சங்க விவசாயிகள் பயன்பெற, தேயிலை வாரியம் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கல்விக்கு உதவித்தொகைகள் வழங்கும் நிலையில் அதனை பெறுவதற்கு, பெற்றோர் முன்வரவேண்டும். இதற்கு தேயிலை வாரியத்தின் அடையாள அட்டை பெற்றுக் கொள்வது அவசியம் ஆகும். அதேபோல் தேயிலை தொழிலை மேம்படுத்த, அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் அளவில், அவற்றை விவசாயிகள் குழுவாக இணைந்து பெற்று பயன்பெற முன் வரவேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, தேயிலை விவசாயிகள், பயன்பெறும் வகையில் பல்வேறு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டது. பயிற்சியாளர் மணிகண்டன், 'தரமான தேயிலை பறிப்பது குறித்து,' விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில் சேரங்கோடு, படைச்சேரி, காபிகாடு பகுதிகளை சேர்ந்த தேயிலை விவசாயிகள், சங்கத்தின் பொருளாளர் குணசேகரன் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். தலைவர் தேவதாஸ் நன்றி கூறினார்.