கிராம சபை கூட்டங்களில் மக்கள் பங்கேற்க அழைப்பு
ஊட்டி; சுதந்திர தினத்தன்று நடக்கும் கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில், காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம் போன்ற நாட்களில், கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வரும், 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை: வரும், 15ம் தேதி சுதந்திர தினத்தன்று காலை, 11:00 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டங்களை மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்த கூடாது. கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நடக்கும் இடம், நேரத்தை மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை விவரங்களை கிராம சபை கூட்டத்தில் படித்து காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும். துாய்மையான குடிநீர் வினியோகம், வரி செலுத்தும் சேவை, இணைய வழிமனை பிரிவு, கட்டட அனுமதி, சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் வாயிலாக அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும். ஊரக பகுதிகளில் ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றை அடிப்படையாக கொண்டு கட்டட அனுமதி பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறை தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, 2,500 சதுர அடிக்கு குறைவான மனைப்பரப்பில், 3,500 சதுர அடி வரை தரைத்தளம் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட, 2 குடியிருப்பு வரை உள்ள குடியிருப்பு கட்டடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும். தமிழகத்தில் எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.