கூட்டு பட்டாவில் பெயரை நீக்கி முறைகேடு; துணை தாசில்தார், வி.ஏ.ஓ., சஸ்பெண்ட்
ஊட்டி; கூட்டு பட்டாவில் பெயரை நீக்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக துணை தாசில்தார், வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த பரமேஸ்வரி என்ற துணை தாசில்தார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குன்னுார் தாசில்தார் அலுவ லகத்தில் துணை தாசில்தாராக பணியாற்றினார். அப்போது, குன்னுார் அருகே உள்ள அதிகரட்டி பகுதியில் ஒரு குடும்பத்திற்கு சொந்தமான இடம் கூட்டு பட்டாவில் இருந்தது. அதில், சில குறிப்பிட்ட நபர்களின் பெயரை நீக்கிவிட்டு, தனது பெயருக்கு பட்டா மாற்ற வலியுறுத்தி, அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். இந்த சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தாமல், துணை தாசில்தார் பரமேஸ்வரி குறிப்பிட்ட நபருக்கு பட்டா மாற்றம் செய்து, மற்றவர்களின் பெயர்களை நீக்கி விட்டதாக கூறப் படுகிறது. பட்டாவில் பெயர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், இதுகுறித்து கலெக்டர் மற்றும் முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர். புகார் குறித்து கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், குன்னுார், சப்-கலெக்டர் சங்கீதா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதில், விதி மீறி பட்டா மாற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப் பட்டது. இதை தொடர்ந்து, துணை தாசில்தார் பரமேஸ்வரி மற்றும் அதிகரட்டி வி.ஏ.ஓ., சிவக்குமார் ஆகிய இருவரையும் பணி இடை நீக்கம் செய்து கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார்.