மட்கும் குப்பையை வீட்டில் உரமாக்கும் திட்டம் சாத்தியமாகுமா? துாய்மை பணியாளர்களின் சுமை வெகுவாக குறையும்
குன்னுார்: குன்னுாரில் முதல் முறையாக கொண்டு வரப்பட்ட, மட்கும் குப்பையில் உரமாக்கும் திட்டத்தை, நகர குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் செயல்படுத்தினால், உள்ளாட்சி அமைப்புகளில் துாய்மை பணியாளர்களின் சுமையை வெகுவாக குறைக்க முடியும். குன்னுார் நகராட்சியில், கடந்த 2017ம் ஆண்டில் முதல் முறையாக, குடியிருப்பு பகுதி மற்றும் ஓட்டல்களில் வெளியாகும் மட்கும் குப்பைகளை கொண்டு உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், பெட்போர்டு பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் மற்றும் கன்னி மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு சதுர அடி போதும்
இத்திட்டத்தில், பழைய பிளாஸ்டிக் தொட்டிகள் அல்லது சின்டெக்ஸ் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்து, அதில், துளைகள் இட்டு பூமிக்குள் புதைத்து, மூடியை திறந்து குப்பைகள் கொட்டுவதற்கு ஏதுவாக அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் வீட்டு தோட்டங்கள் அல்லது காலியான இடம், 4 சதுர அடி இருந்தால் போதும். கொட்டப்பட்ட மட்கும் குப்பைகள் மூன்று மாதங்களில் உரமாக மாறும். இதன் துர்நாற்றம் ஏதும் வெளியே வராது. சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. வீட்டு தோட்டம், கார்டன்களின் உரத்தை பயன்படுத்த முடியும். இத்தகைய சிறந்த திட்டத்துக்கு, போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. நாளடைவில் பிளாஸ்டிக் உட்பட மட்காத பொருட்களை பலரும் தொட்டியில் கொட்டியதால் திட்டம் பாதியில் கைவிடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
குன்னுார் நகராட்சியில் ஒரு நாளைக்கு, 7 டன் அளவிற்கு மட்கும் குப்பைகள் அப்புறப்படுத்தி, ஓட்டுப் பட்டறை அருகே மறுசுழற்சி மையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு மட்கும் குப்பைகளை குடியிருப்புகளில் இருந்து முறையாக பிரித்து கொடுக்காத சூழல் தொடர்கிறது. இதனால் துாய்மை பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனை தவிர்க்க, 'வீடுதோறும் குப்பை மேலாண்மை திட்டம்' கொண்டு வந்து, மாவட்டம் முழுவதும் செயல்படுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். துாய்மை பணியாளரின் பணி குறையும். 500 கிலோ கழிவில் 50 கிலோ உரம்
இத்திட்டத்தை பல வீடுகள், ஓட்டல்களில் செயல்படுத்திய, முன்னாள் நகர் நல அலுவலர் டாக்டர் ரகுநாதன் கூறியதாவது: நீலகிரி மண் நுண்ணுயிர்கள் நிறைந்ததாக உள்ளது. இந்த திட்டத்தின் படி பூமிக்கடியில் புதைக்கப்பட்ட தொட்டியில் பல துளைகள் இடப்பட வேண்டும். மேற்பகுதியில் சூரிய வெப்பத்தை உள்ளிழுக்கும் வகையிலான பிளாஸ்டிக் தொட்டியும், மட்கும் குப்பைகளை இயற்கை முறையில் உரமாக்க பயன்படுகிறது. 'நான்கு பேர் உள்ள ஒரு வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு கிலோ வீதம், உணவு கழிவுகள், காய்கறி, பழ கழிவுகள்,' என, 500 நாட்களில், 500 கிலோ வரை கொட்டினால், 50 கிலோ வரை உரம் கிடைக்கும். உரம் எடுப்பதற்கு முன்பு மூன்று மாதங்கள் விடப்பட வேண்டும். கான்கிரீட் வீடு மொட்டை மாடிகளிலும், கூடை போன்று சிமென்ட் ரிங் அமைத்து அதில் மண் கொட்டப்பட்டு, கழிவுகளை கொட்டி மூடினால், சூரிய வெப்பத்தில் உரமாக மாற்றலாம். இந்த உரம் பயன்படுத்துவதால், வீட்டு தோட்டங்களில் உள்ள மலர்செடிகளும் வண்ணங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும் பயனுள்ளதாக அமையும். இதனை கட்டட அனுமதி விதிகளில் கொண்டு வர நடவடிக்கை எடுத்தால், நகர பகுதிகளில் துாய்மை பிரச்னை வெகுவாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.