உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம்: கலெக்டர் அலுவலகம் முற்றுகை

ஊட்டி: ஊட்டி அருகே, நஞ்சநாடு கிராமத்தில் கார்த்திகை தீபத் திருநாளின் போது அங்குள்ள பிரதான கல் தூணில் நெய் தீபம் ஏற்றுவதில், கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று (நவ.,24) நடந்த கார்த்திகை தீபத் திருநாளில் இருதரப்பினரிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டதால், போலீஸ் பாதுகாப்புடன் எவ்வித ஆடலும், பாடலும் இல்லாமல், கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள கல் தூணில் நெய் தீபம் ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து, அன்றிரவு ஒரு தரப்பினர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ பகுதிக்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். சமாதானம் அடையாததால் பெண்கள் உட்பட, 110 மீது வழக்கு பதிவு செய்து, ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர். விடிய காலையில் அவர்கள் கிராமத்துக்கு சென்றனர். இந்நிலையில், இன்று (நவ.,25) மதியம் மீண்டும் கிராமத்தின் ஒரு தரப்பினர் கலெக்டரை சந்திக்க வந்தனர். அவர் வேறு நிகழ்ச்சிக்கு சென்றால், ஏ.டி.எஸ்.பி., மணிகண்டன் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்த பின் மக்கள் கலைந்து சென்றனர். தொடர்ந்து, கிராமத்தில் இரண்டாம் நாளாக தீப விளக்கை மற்றொரு தரப்பினர் ஏற்றினர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !