உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கோத்தகிரியில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவு; நான்கு வீடுகள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

கோத்தகிரியில் கன மழையால் ஏற்பட்ட மண்சரிவு; நான்கு வீடுகள் சேதம்: அதிகாரிகள் ஆய்வு

கோத்தகிரி ; கோத்தகிரியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், மேட்டுப்பாளையம் சாலையில், தட்டப்பள்ளம் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது.நீலகிரி மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை கடந்த சில நாள் நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த மழையின் தாக்கம் நேற்று முன்தினம் இரவு அதிகரித்து, நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது.அதில், கோத்தகிரியில் அதிகபட்சமாக, 138 மி.மீ; கீழ் கோத்தகிரியில், 143 மி.மீ; எடப்பள்ளியில், 137 மி.மீ., மழை பதிவானது. இந்த மழையில், நேற்று அதிகாலை நேரத்தில், கோத்தகிரியில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள மேட்டுப்பாளையம் சாலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதில், 10 அடி துாரத்தில் இருந்த தேயிலை தொழிற்சாலை மற்றும் குடியிருப்புகள் தப்பின. தொழிற்சாலைக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. இதேபோல கட்டபெட்டு அருகே, மண் சரிவு ஏற்பட்டது. இதில், அங்குள்ள காட்டேஜ் மற்றும் மரங்கள் அந்தரத்தில் தொங்கின. கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட குமரன் காலனியில் மூன்று வீடுகள், கிருஷ்ணாபுதுாரில், ஒரு வீடு சேதமடைந்தன.கோத்தகிரி காம்பாய் கடைபகுதியில், நடைபாலம் இடிந்து ஒரு வீட்டிற்குள் மழை நீர் புகுந்தது. இதனால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டனர். கோட்ட ஹால் பகுதியில். மின்கம்பம் விழுந்து, பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.இதேபோல, கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட இடங்களில், லேசான மண் சரிவு ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் போலீசார் உதவியுடன் சீரமைப்பு பணியில் ஈடுபட்டினர். இந்த மழையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. துறை அதிகாரிகள், அலுவலர்கள், பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ