சிறுத்தை தாக்கி மாடு பலி: கேமரா வைத்து கண்காணிப்பு
கூடலுார்:கூடலுார் புறமணவயல் பகுதியில், சிறுத்தை தாக்கி மாடு பலியான பகுதியில், வனத்துறையினர் தானியங்கி கேமரா வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடலுார் புறமணவயல் பகுதியில் ரங்கசாமி என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மாடுகளை கட்டி வைத்துள்ளார். நேற்று காலை அவரின் மாடுகளில் ஒன்று ரத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்தது. வனவிலங்கு வேட்டையாடி, அதன் உடல் பாகத்தில் சில பகுதிகளை உண்டு சென்ற அடையாளமும் இருந்தது. குடியிருப்பை ஒட்டி நடந்த இச்சம்பவத்தால் மக்கள் அச்சம் அடைந்தனர். கூடலுார் வனத்துறையினர், 'அப்பகுதியில் ஆய்வு செய்த போது, மாட்டை சிறுத்தை வேட்டையாடி கொன்றது தெரியவந்தது. அப்பகுதியில் தானியங்கி கேமரா வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது,' என்றனர்.