வேலை வாய்ப்புகளை தேடி வாழ்வில் முன்னேறணும் ; திறன் வழிகாட்டுதல் முகாமில் கலெக்டர் அறிவுரை
ஊட்டி; 'வெளி மாவட்ட வேலை வாய்ப்புகளை தேடி சென்று வாழ்வில் முன்னேற வேண்டும்,' என, கலெக்டர் தெரிவித்தார். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் பழங்குடியினருக்கு வேலை வாய்ப்பு திறன் வழிகாட்டுதல் முகாம் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:நீலகிரியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காகவும் அவர்களது குழந்தைகள் மேம்பாட்டுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழங்குடியின மாணவர்கள் பயன் பெறும் வகையில் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாவட்ட இளைஞர்கள், பெண்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு இருக்க கூடாது. நீலகிரியில் வேலை வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. அதே சமயம் மற்ற மாவட்டங்களில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்த மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியின இளைஞர்கள் மற்றும் பெண்கள் பலரும் கல்லுாரி படிப்பு முடித்துள்ளனர். வெளி மாவட்டங்களுக்கு செல்லும் போது வேலைவாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே, இளைஞர்கள் மற்றும் பெண்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று தாங்கள் தேர்வு செய்யப்பட்ட பணிகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் உதயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், திரளான பழங்குடி இளைஞர்கள் பங்கேற்றனர்.