உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சட்ட அமலாக்கம் வாயிலாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தணும்! மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை

சட்ட அமலாக்கம் வாயிலாக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தணும்! மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு அறிவுரை

ஊட்டி: நீலகிரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் சட்ட அமலாக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, கல்வி நிறுவன நிர்வாகிகள், மேலாண்மை பிரதிநிதிகள் பங்கேற்ற ஒருங்கிணைப்பு கூட்டம், எஸ்.பி. பிருந்தா தலைமையில் நடந்தது. அதில், கல்வி நிறுவன நிர்வாகிகளுக்கு அளித்த ஆலோசனை விபரம்: மாநில அரசின் உத்தரவின் பேரில், போதை பொருளுக்கு எதிராக மாநில அளவில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனினும், போதை பொருள் புழக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத சூழல் உள்ளது. சமீபத்தில், கோவையில் தனியார் கல்லுாரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பின்னணியில் போதை பொருள் பயன்பாட்டால் இச்சம்பவம் நடந்ததாக தெரிய வந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வருகை பதிவை கண்காணிக்கணும் இந்நிலையில், நீலகிரியில் உள்ள கல்வி நிறுவனங்களின் வளாகம், சுற்றுப்புறங்களிலும் போதை பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிராக கடுமையான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை அமல்படுத்த வேண்டும். மாணவர்களிடம் நடத்தை மாற்றங்கள், போதைப்பொருள் பயன்பாட்டுக்கான உடல் அல்லது அதை சார்ந்த அறிகுறிகள் , நீண்ட காலவருகை பதிவு இன்மை ஆகியவற்றை, கல்லுாரி நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எந்த ஒரு சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளையும் உடனடியாக உள்ளூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். பாலின பாதுகாப்பு முக்கியம் போதைப் பொருள் கட்டுப்பாட்டுடன் சேர்த்து , பாலின பாதுகாப்பு மற்றும் உடனடி குறைதீர்ப்புக்காக உள் புகார் குழுக்களை செயல்பாட்டில் வைத்திருப்பது கல்வி நிறுவனங்களில் சட்டபூர்வ கடமையாகும். வளாக கண்காணிப்பு குழுக்கள் வாயிலாக ராகிங் எதிர்ப்பு சட்டங்களை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். சட்ட அமலாக்கத்தை தாண்டி மாணவர் நலனை ஆதரிக்கும் வகையில், மனநல தலையீடுகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ள வேண்டும். கடுமையான மன உளைச்சலுக்கான அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, தற்கொலை போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நிறுவனங்கள் வலுவான ஆலோசனை ஆதரவை அளிக்க முன் வர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது. சி.சி.டி.வி., கண்காணிப்பு அவசியம் எஸ்.பி., பிருந்தா கூறுகையில்,'' போதை பொருளுக்கு எதிராக அனைத்து நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் மத்தியில் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கல்லுாரிகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். கட்டாய தலைகவச விதி, செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் , வேக கட்டுப்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், அனைத்து முக்கிய எல்லை, நுழைவு பகுதிகளில், சி.சி.டி.வி., கண்காணிப்பு உள்ளதை உறுதி செய்ய தணிக்கை நடத்த வேண்டும். பாதுகாப்பான மற்றும் சட்டத்தை மதிக்கும் கல்வி சூழலை பேணுவதற்கு உள்ளூர் போலீசாருடன், கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள் நெருக்கமாக ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ