மஞ்சூர் வழித்தட பஸ் பிரச்னை நாள்தோறும் பயணிகள் கடும் அவதி
மஞ்சூர்: மஞ்சூர் வழித்தடத்தில் சரிவர அரசு பஸ் இயங்காததால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். மஞ்சூர் வழித்தட சுற்றுவட்டார மக்கள் பல்வேறு தேவைகளுக்கு ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். நேற்று காலை முதல் ஊட்டியிலிருந்து மஞ்சூர் , மேல்குந்தா , கிண்ணக் கொரை உள்ளிட்ட பஸ்கள் நிறுத்தப்பட்டதுடன், அந்த பஸ்களை வேறு வழித்தடத்தில் இயக்கியுள்ளனர். மஞ்சூர் வழித்தடத்தில் பயணிகள் ஆங்காங்கே பல மணி நேரம் காத்திருந்து கூட்ட நெரிசலில் சிரமத்திற்கு இடையே பஸ் ஏறி சென்றனர். ஊட்டி கிளை இரண்டுக்கு பயணிகள் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தும் போக்குவரத்து கழகம் சரிவர நடவடிக்கை எடுக்காததால் பயணிகள் அதிருப்தி அடைந்தனர். பயணிகள் கூறுகையில், 'அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் வழித்தடங்களில் பஸ் பிரச்னைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.