உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கேத்ரீன் நீர்வீழ்ச்சி பகுதியில் இதமான காலநிலை; சுற்றுலா பயணிகள் குதுாகலம்

கேத்ரீன் நீர்வீழ்ச்சி பகுதியில் இதமான காலநிலை; சுற்றுலா பயணிகள் குதுாகலம்

கோத்தகிரி ; கோத்தகிரி கேத்ரீன் நீர்வீழ்ச்சி பகுதியில் இதமான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா மையங்களில், கோத்தகிரி அருகே அமைந்துள்ள கேத்ரீன் நீர்வீழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நீர்வீழ்ச்சி பகுதியில், கோடை சீசன் உட்பட, சாதாரண நாட்களிலும் கூட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஆபத்தை உணராமல், தாழ்வான பகுதிக்கு சென்று, மது அருந்தி, உணவுப் பொருட்கள் மற்றும் மது பாட்டில்களை வீசி பாதிப்பை ஏற்படுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, வனத்துறை சார்பில், எஸ்.ஏ.டி.பி., திட்டத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கழிவறையுடன், கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள், தாழ்வான பகுதிக்கு செல்வது தடைபட்டுள்ளது.கடந்த சில நாட்களாக, மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இப்பகுதியில் மேக மூட்டத்துடன் இதமான காலநிலை நிலவுகிறது. இதனை, சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கண்டு களித்து செல்கின்றனர்.வனத்துறை சார்பில், நுழைவு கட்டணமாக ஒரு நபருக்கு, 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. வார விடுமுறை நாட்களில், 300க்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர். நீர் வீழ்ச்சியில் மேல் பகுதிக்கு சென்று குளிக்க தடை விதித்துள்ள வனத்துறை, அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகளை கண்காணிக்க ஏதுவாக, மூன்று வனத்துறை ஊழியர்களை நிரந்தரமாக பணியமத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை