குப்பை எடை போடுவதில் தவறு நடக்கிறது; நகர மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு
கூடலுார் : 'கூடலுார் நகராட்சியில், தனியார் ஒப்பந்த மூலம் அகற்றப்படும் குப்பைகளை எடை போடுவதில் தொடர்ந்து தவறு நடந்து வருகிறது,' என, மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.கூடலுார் நகராட்சி கூட்டம் தலைவர் பரிமளா தலைமையில் நடந்தது. நகராட்சி பொறியாளர் சாந்தி, பணி மேற்பார்வையாளர் பிரதீப், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், மேலாளர் சந்திரகுமார் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர் உஸ்மான்: தொரப்பள்ளி -அத்திப்பாளி குடிநீர் திட்டம் மதிப்பீடு வழங்க வேண்டும்.இளங்கோ: இத்திட்டத்தை கூடலுாருக்கு கொண்டு செல்லக்கூடாது.சத்தியசீலன்: அவசர தேவைக்கு மற்ற பகுதிகளுக்கும், இங்கிருந்து குடிநீர் வழங்க வேண்டும்.அனுப்கான்: நகராட்சி குப்பை கிடங்கு, 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது. எடை மேடை இல்லாததால், குப்பைகளை எடை போடுவதில் அதிக தவறு நடக்கிறது. நாள் ஒன்றுக்கு, 21 ரூபாய் நகராட்சிக்கு நஷ்டம் ஏற்படுவதாக கண்காணிப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. எனவே, பொது நிதியிலிருந்து எடைமேடை அமைக்க வேண்டும். குப்பை அகற்ற, ஒப்பந்ததாரர் பயன்படுத்தி வரும், பல நகராட்சி வாகனங்கள் தகுதி சான்று இல்லாமல் இயக்கப்படுகிறது. ஒப்பந்ததரார் வாகனங்களுக்கு தகுதி சான்று பெறுவதுடன், ஒப்பந்த நிபந்தனைபடி ஒப்பந்ததாரர் வாகனங்களை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி பொறியாளர்: எடை மேடை அமைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றினால் அதிகாரிகளுக்கு அனுப்பி அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும்.தலைவர்: நகராட்சி வாகனங்களுக்கு உடனடியாக தகுதி சான்று பராமரிப்பு பெறுவதுடன், பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். தவறினால் நகராட்சி வாகனங்களை அதிகாரிகள் தங்கள் வசம் கொண்டு வர வேண்டும்.பிற கவுன்சிலர்கள்: கோவில், பள்ளி வளாகங்கள் அருகே, புதிதாக மாமிச கடை அமைக்க அனுமதி கொடுப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க வேண்டும்.தலைவர்: மாமிச கடைகளுக்கு அனுமதி வழங்குவதில், அதிகாரிகள் எச்சரிக்கையுடன், மக்கள் பாதிக்காத வகையில் நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும்.உஸ்மான்: மன்ற கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மீது, செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொடர்ந்து, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. துணைத் தலைவர் சிவராஜ் நன்றி கூறினார்.