| ADDED : டிச 27, 2025 06:36 AM
பாலக்காடு: நல்ல பாடல்கள் காணாமல் போவதற்கு நவீன திரைப்பட உருவாக்கமே காரணம், என பிரபல மலையாள பாடலாசிரியர் வயலார் சரத்சந்திர வர்மா தெரிவித்தார். கேரள மாநிலம், பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், கலை அமைப்பான ஸ்வரலயா சார்பில், வரும், 31ம் தேதி வரை நடன சங்கீத உற்சவம் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள வந்த பிரபல மலையாள பாடலாசிரியர் வயலார் சரத்சந்திர வர்மா நிருபர் களிடம் கூறியதாவது: சமூகத்தில் பொதுவாக காணப்படும் அன்பின்மை, பாடல் வரிகள், கவிதை அழகை குறைத்துவிட்டது. வார்த்தைகள் கூட மதத்தாலும், அரசியலாலும் கட்டுப்படுத்தப்படுகின்றன . அது நல்ல பாடல்களின் வெளிப்பாட்டைத் தடுக்கிறது. நல்ல பாடல்கள் காணாமல் போவதற்கு நவீன திரைப்பட உருவாக்கமே காரணம். இவ்வாறு, அவர் கூறினார். பிரபல மலையாள பாடலாசிரியர் ராஜிவ் ஆலுங்கல் கூறுகையில், ''பாடலாசிரியர்கள் எப்போதும் புறக்கணிக்கப்படுகின்றனர். பாடல் வரிகள் ஒரு பாடலின் உயிராகும்,'' என்றார். மலையாள திரைப்பட பின்னணி பாடகர் சுதீப்குமார் கூறுகையில், ''இளம் தலைமுறையினருக்கு இலக்கியம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் தான், திரைப்படங்களில் நல்ல பாடல்கள் உருவாகாமல் போகின்றன. கவிதை தரம் மற்றும் கலாசார செழுமை கொண்ட பாடல்கள், பொதுவான இசை நிகழ்ச்சிகளில் நிகழ்த்தப்படுவதில்லை. எல்லாப் பாடல்களுமே கொண்டாட்டமானவை. இதற்கிடையில், கவிதைகள் இறந்து கொண்டிருக்கின்றன,'' என்றார்.