உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூட்டுறவு தொழிற்சாலைகளை ரூ.64 கோடியில் நவீனப்படுத்தியும் எவ்வித பயனுமில்லை! நஷ்டத்தில் இயங்குவதால் மாற்று நடவடிக்கை அவசர அவசியம்

கூட்டுறவு தொழிற்சாலைகளை ரூ.64 கோடியில் நவீனப்படுத்தியும் எவ்வித பயனுமில்லை! நஷ்டத்தில் இயங்குவதால் மாற்று நடவடிக்கை அவசர அவசியம்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் உள்ள, 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தரமான தேயிலை துாள் உற்பத்தி செய்ய, 64 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணி நடந்தும் பயனில்லை.நீலகிரி மாவட்டத்தில், சிறு, குறு விவசாயிகள், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். அதில், 25 ஆயிரம் உறுப்பினர்கள், தங்களது தேயிலை தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை, குன்னுார் 'இன்கோசர்வ்' ( கூட்டுறவு இணையம்) கட்டுப்பாட்டில் உள்ள 'கிண்ணக்கொரை, மஞ்சூர், பிக்கட்டி, எடக்காடு, மேற்குநாடு, இத்தலார், கைக்காட்டி, கரும்பாலம், நஞ்சநாடு, மகாலிங்கம், எப்பநாடு, கட்டபெட்டு, சாலிஸ்பரி, பிராண்டியா,' உள்ளிட்ட, 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு பசுந்தேயிலை வினியோகித்து வருகின்றனர்.சராசரியாக ஆண்டுக்கு ஒவ்வொரு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள், 3 லட்சம் கிலோ முதல் 5 லட்சம் கிலோ வரை பசுந்தேயிலை கொள்முதல் செய்கின்றன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள், குன்னுார், கோவை, கொச்சின் தேயிலை ஏல மையத்தின் வாயிலாக விற்பனை செய்கின்றன. அதில், தனியார் தேயிலை துாளுக்கு கிடைக்கும் விலை, கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட துாளுக்கு கிடைப்பதில்லை. இதனால், பல தொழிற்சாலைகளில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

நவீனப்படுத்தியும் பயனில்லை

இந்நிலையில், மாவட்டத்தில் பல தனியார் தேயிலை தொழிற்சாலைகளில், இலைக்கு நல்ல விலை கொடுத்து வருவதால், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் பலர் தனியாரை நாட துவங்கி உள்ளனர். இதனால், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு கொள்முதல் படிப்படியாக குறையும் நிலை ஏற்பட்டது.கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் தேயிலை துாள் உற்பத்திக்கு ஏற்றவாறு புதிய இயந்திரங்களை பொருத்தி நவீன மயமாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 'நபார்டு' வங்கி உதவியுடன் ஒரு தொழிற்சாலைக்கு, 4 கோடி ரூபாய் வீதம், 64கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தொழிற்சாலைகளும் படிப்படியாக நவீனமயமாக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நிதிக்கான கடன் தொகையை, ஒவ்வொரு தொழிற்சாலை நிர்வாகமும் மாதந்தோறும் வங்கியில் செலுத்தி வருகின்றன. எனினும், தேயிலை துாள் உற்பத்தி எவ்வித மேம்பாடும் ஏற்படவில்லை. இதனால், நஷ்டத்தில் இருந்து மீள முடியவில்லை.மேற்கு நாடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, முன்னாள் சேர்மன் மகேந்திரன் கூறுகையில் '' நவீன மயமாக்கப்படும் நோக்கில் தொழிற்சாலைகளின் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தரமான தேயிலை துாளை உற்பத்தி செய்வதில் எவ்வித வளர்ச்சியும் அடையவில்லை.இதனை போக்க, தொழிற்சாலை நிர்வாகங்கள் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் முக்கியஸ்தர்களை சந்திக்க வேண்டும். அங்கு கூட்டம் நடத்தி, தரமான தேயிலை துாளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் விதங்கள் குறித்து அங்கத்தினர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இப்பணி தொடர்ந்தால் மட்டுமே தரமான தேயிலையை வாங்கி, சிறந்த முறையில் தேயிலை துாள் உற்பத்தியை மேற்கொள்ள முடியும். அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். இதனால், தொழிற்சாலை உறுப்பினர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை