தண்ணீரில் தவறி விழுந்த கடமான் உயிரிழப்பு
பந்தலுார்; பந்தலுார் அருகே தேவாலா கோட்டவயல் பகுதியில் விவசாய நிலங்கள் மற்றும் அதனை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் காலை இங்குள்ள குடியிருப்புகளை ஒட்டிய தோட்டத்தில் உள்ள சிறிய குளத்தில் கடமான் ஒன்று விழுந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. வனச்சரகர் சஞ்சீவி தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, பார்த்தபோது தண்ணீரில் தவறி விழுந்த கடமான் உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து கடமானின் உடல் மீட்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான குழுவினர் கடமானின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். விசாரணை நடந்து வருகிறது.