குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி; போலீசார் விசாரணை
கூடலுார்; கூடலுார் அருகே மூன்று குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து, தாய் தற்கொலை முயற்சி மேற்கொண்டதில், இரண்டரை வயது குழந்தை இறந்தது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் சரஸ்வதி,35. திருமணமான இவர் கணவரை பிரிந்து, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, இரண்டு குழந்தைகளுடன், கூடலூர் வந்துள்ளார். இங்கு பிஜின்ஜோசப் என்பவரை திருமணம் செய்து வசித்து வருகிறார். அவருக்கு ஒரு குழந்தை பிறந்தது. கணவர் பலரிடம் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்துவதில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மைசூரில் ஒரு மாதத்துக்கு முன், அவரின் தந்தை மரணத்திற்கு சென்ற சரஸ்வதி, கடந்த, 9ம் தேதி தன்னுடைய, 10,12, இரண்டரை வயது குழந்தையுடன் கூடலுார் வந்தார். தற்கொலை செய்ய முடிவு செய்து, தனது குழந்தைகளுக்கு, குளிர்பானத்தில் எலி மருந்தை கலக்கி கொடுத்து விட்டு அவரும் குடித்துள்ளார். தொடர்ந்து, கோத்தகிரியில் உள்ள சகோதரி வீட்டுக்கு சென்று தங்கி உள்ளார். அனைவரும் விஷம் குடித்து இருப்பது, 10ம் தேதி காலை தெரிய வந்ததை தொடர்ந்து, நான்கு பேரையும் சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், விஷம் கொடுக்கப்பட்ட லோகித் என்ற இரண்டரை வயது குழந்தை, நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கூடலுார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், தாய்மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். சரஸ்வதி மற்றும் ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.