கரோலினா சாலையில் சகதி
குன்னுார், ; குன்னுார் உபதலை ஊராட்சி, 5வது வார்டு கரோலினா மற்றும் புது காலனி பகுதிகளில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. இப்பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டது.சாலை துண்டிக்கப்படும் அபாயம் இருந்ததால், அதிகாரிகள் ஆய்வு செய்து சில மாதங்களுக்கு பிறகு, 14 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி துவக்கப்பட்டது. பணி மந்தகதியில் நடந்தது.இந்நிலையில், அங்கு மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு சாலை துண்டிக்கும் அபாயம் ஏற்பட்டதால், மாவட்ட நிர்வாக உத்தரவின் பேரில் சீரமைப்பு பணிகள் மீண்டும் நடந்தன.இந்நிலையில், இங்குள்ள மண் முழுமையாக அகற்றப்படாததால், சேறும், சகதியும் நிரம்பி காணப்படுகிறது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுகின்றனர்.மக்கள் நடமாடவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும், தேயிலை தோட்டத்திற்கு சென்று மூட்டைகளை சுமந்து வரும் தொழிலாளர்களும், ரேஷன் கடைக்கு சென்று வரும் மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.