நீராதார பகுதியில் டைடல் பார்க் கொண்டு வர நகராட்சி அனுமதி
குன்னுார்; குன்னுார் எடப்பள்ளி பந்துமை நீராதார பகுதியில் டைடல் பார்க் கொண்டு வருவதற்கான நகராட்சி மன்ற அனுமதிக்கு வைக்கப்பட்டதில், தி.மு.க. கவுன்சிலர்கள் அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றினர். குன்னுார் எடப்பள்ளி அருகே பந்துமை பகுதி நீர்ப்பிடிப்பு மற்றும் சதுப்பு நிலம் வகைப்படுத்தப்பட்ட பகுதியில், டைடல் பார்க், அரசு கலைக் கல்லூரி, கூடுதல் கலெக்டர் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புகள், தீயணைப்பு நிலைய வீரர்களின் குடியிருப்பு, 10 ஏக்கரில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக டெண்டர் விட உள்ளதால், நகராட்சி மன்ற அனுமதிக்கு கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. அ.தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்நிலையில், தி.மு.க., கவுன்சிலர்கள் ஏகமனதாக அனுமதி அளித்து தீர்மானமாக நிறைவேற்றினர். இதன் காரணமாக, எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தவும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பொது நல வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.