நீலமலையும் நீலக்குறிஞ்சியும் புத்தகத் திருவிழா விருந்து
ஊட்டி: ஊட்டி புத்தகத் திருவிழாவில், 'நீலமலையும் நீலக்குறிஞ்சியும்' என்ற தலைப்பில் நடந்த கவியரங்கம் பார்வையாளர்களின் செவிகளுக்கு விருந்தாக அமைந்தது. ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையம் வளாகத்தில், நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலகத்துறை சார்பில், 4வது புத்தகத் திருவிழா, 25ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், 25 க்கும் மேற்பட்ட அரங்குகளில், பல்லாயிரக்கணக்கான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்கள் உட்பட பொதுமக்கள், புத்தக விழாவில் பங்கேற்று, அரங்குகளை பார்வையிட்டு புத்தகங்களை வாங்கி செல்கின்றனர். அதன் ஒரு பகுதியாக, தோட்டக்கலை, மலை பயிர்கள் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நேற்று, நீலமலையும் நீலக்குறிஞ்சியும் என்ற தலைப்பில், சிறப்பு கவியரங்கம் நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி வரவேற்றார். கவிஞர் அம்சபிரியா சிறப்புரையாற்றினார். இது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் செவிகளுக்கு விருந்தாக அமைந்தது. தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சி இடம் பெற்றது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று அரங்குகளை பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி சென்றனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் பைசல் நன்றி கூறினார்.