உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சூறை காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழை மரங்கள்

சூறை காற்றில் சாய்ந்த நேந்திரன் வாழை மரங்கள்

பந்தலுார்: பந்தலுார் அருகே சூறை காற்றில் நேந்திரன் வாழை மரங்கள் சாய்ந்ததில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த, 15 மற்றும் 16-ம் தேதிகளில் மழை பெய்தது. அதில், 16ம் தேதி கனமழை பெய்ததுடன் பலத்த காற்று வீசியது. இதனால், காய்ந்து காணப்பட்ட தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள், பசுமைக்கு மாற துவங்கி உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்று வீசியதில், அம்பலமூலா அருகே வேரமாங்கா என்ற இடத்தில், விவசாயிகள் பயிரிட்டு இருந்த நேந்திரன் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து பாதிப்பு ஏற்பட்டது. அதில், ஹரிதாஸ் என்பவரின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து, யோகண்ணன் என்பவர் பயிரிட்டிருந்த, 2000 வாழை மரங்கள்; பிரபாத் என்பவர் பயிரிட்டு இருந்த, 2000 வாழை மரங்கள், அடியோடு சாய்ந்து பாதிக்கப்பட்டது. அறுவடைக்கு மூன்று மாதமே உள்ள நிலையில் வாழை தார்கள் வீணாகி போனதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை கிராம நிர்வாக அலுவலர் அசோக்குமார் மற்றும் உதவியாளர்கள் ஆய்வு செய்தனர். அவர் கூறுகையில், 'சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் ஐந்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு இருந்த, 5-,000 வாழை மரங்கள் அடியோடு சேர்ந்து விழுந்து பாதிக்கப்பட்டு உள்ளது. தோட்டக்கலைத்துறைக்கு அறிக்கை அனுப்பப்படும்,' என்றார்.விவசாயி பிரபாத் கூறுகையில், ''குத்தகைக்கு இடங்களை வாங்கிய விவசாயிகள் பலரும், வட்டிக்கு கடன் வாங்கி வாழை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த மழையில், குலை தள்ளிய நிலையில், வாழை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை