புதிய அரசு கல்லுாரி திறந்தாச்சு; கழிப்பிட வசதியை மறந்தாச்சு
குன்னுார்,; குன்னுாரில் புதிதாக துவங்கப்பட்ட அரசு கலை கல்லுாரியில் உரிய கழிப்பிட வசதி ஏற்படுத்தாமல் உள்ளதால் மாணவ, மாணவிகள் அவதிக்கு உள்ளாகின்றனர். குன்னுார் அரசு கலை கல்லுாரி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் துவக்கப்பட்டது. தற்போது, இங்கு, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்குள்ள கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர். சமூக ஆர்வலர் தர்மசீலன் கூறுகையில், ''திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்த கூடாது. கல்வி உரிமை சட்டத்தில், கழிப்பிடம் கட்டாயம் அடிப்படை வசதியாக ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், குன்னுாரில் புதிதாக துவங்கப்பட்ட அரசு கல்லுாரியில் உரிய கழிப்பிட வசதி செய்து தரப்படாமல் உள்ளதால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு ஏழ்மையான மாணவர்கள் அதிகம் பயில்கின்றனர். இங்குள்ள கழிப்பிடங்களை முறையாக பராமரிப்பதுடன், கூடுதல் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.