உயிர் சூழல் மண்டலத்தில் நீலகிரி முதலிடம்; சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தகவல்
கோத்தகிரி; 'நம் நாட்டின் முதல் உயிர் சூழல் மண்டலமாக நீலகிரி விளங்குகிறது,' என, சுற்றுச்சூழல் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.கோத்தகிரி கிரீன்வேலி மெட்ரிக் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக, சுற்றுச்சூழல் கருத்தரங்கு மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது.பள்ளி முதல்வர் செல்லையா தலைமை வகித்தார். பள்ளி நிர்வாக அலுவலர் கங்காதரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:உலக அளவில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நாடுகளில், இந்தியா, ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டின் முதல் உயிர்சூழல் மண்டலமாக, நீலகிரி மாவட்டம் விளங்குகிறது. இங்கு 'ஐந்து வகையான காடுகள்; 4,000 ஆயிரம் தாவர இனங்கள், 100 பாலுாட்டிகள்; 350 வகையான பறவைகள்; 91 வகையான ஊர்வனங்கள் மற்றும் 300 வகையான வண்ணத்துப் பூச்சிகள்,' என, பல்லுயிர் சூழலின் சொர்க்கமாகவும், இங்கு உருவாகும், ஒன்பது ஆறுகளால், தென்னிந்தியாவின் நீர் தொட்டியாகவும் நீலகிரி விளங்குகிறது. சமவெளியின் நீர் ஆதாரம்
சோலைகள் மற்றும் புல்வெளிகள் நீலகிரி சுற்றுச்சூழலில் முக்கிய இரண்டு அம்சங்களாக உள்ளன. சோலை காடுகள், 75 சதவீதம் மழை நீரை உள்வாங்கி, பூமியில் சேமிக்கிறது. அதில் இருந்து, சிறு சிறு ஊற்றுகளும், ஓடைகளும் உருவாகி, சமவெளி பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது.புல்வெளிகள் காற்றில் இருந்து, ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீரை தருகிறது. 25 வகையான பறவைகள், ஒவ்வொரு ஆண்டும் நீலகிரிக்கு வருகின்றன. நீலகிரியில், 25 வகையான குறிஞ்சி செடிகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தவிர, 175 வகையான ஆர்கிட்களின் சிறப்பு இங்கு உள்ளது.பெரும்பாலான, புல்வெளிகள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதன் காரணமாக, மனித-- விலங்கு மோதல் உருவாகிறது. இங்குள்ள காப்பு காடுகளில், சீகை மற்றும் கற்பூரம் போன்ற மரங்களை அகற்றி, உள்ளூர் தாவர இனங்களை வளர்க்கும் பட்சத்தில், 40 ஆயிரம் டி.எம்.சி., தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், 50 மரக்கன்றுகளை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நடவு செய்தனர். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் குமார் வரவேற்றார். ஆசிரியர் பிரவீன் நன்றி கூறினார்.