ஆட்டோ நிறுத்த இடம் இல்லை பாதிக்கப்படும் ஓட்டுனர்கள்
பந்தலுார்: தமிழக எல்லையில் பந்தலுார் பிதர்காடு அமைந்துள்ளது. இப்பகுதிக்கு அரசு பஸ் வசதி இல்லாததால் பொதுமக்கள் ஆட்டோக்களை அதிகளவு தங்களின் பயண தேவைக்காக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக, 80 ஆட்டோக்கள் மற்றும் சுற்றுலா வாகனங்கள், ‘பிக்–அப்’ ஜீப்புகள், இந்த பகுதி சாலை ஓரத்தில் ஊராட்சி மூலம் சிமென்ட் தளம் அமைத்து தரப்பட்ட, பகுதியில் நிறுத்தி இயக்கி வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் புதிதாக கட்டடம் கட்டி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அதனால், ‘ஆட்டோக்களை அங்கு நிறுத்தக்கூடாது’ என, போலீசில் புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சிவகுமார் நேற்று முன்தினம் வந்து, ‘ஆட்டோக்களை இப்பகுதியில் நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும்,‘ என, தெரிவித்துள்ளார். இதனால், ஆட்டோக்கள் நிறுத்த இடம் இல்லாத நிலையில் நேற்று ஆட்டோ ஓட்டுனர்கள், திடீர் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், இது குறித்து சம்பந்தப்பட்ட கட்டட உரிமையாளர் மற்றும் போலீசார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என தெரிவித்தனர். இதனால் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.