உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாதந்தோறும் பென்ஷன் வாங்க காத்திருந்து சிரமப்படும் முதியோர் ; பணம் பெற அலைக்கழிப்பதால் அதிருப்தி

மாதந்தோறும் பென்ஷன் வாங்க காத்திருந்து சிரமப்படும் முதியோர் ; பணம் பெற அலைக்கழிப்பதால் அதிருப்தி

பந்தலுார் ; பந்தலுாரில் முதியோருக்கு பென்ஷன் வழங்க குறிப்பிட்ட இடம் இல்லாத நிலையில், மாதந்தோறும் அலைகழிக்கப்படும் அவலம் தொடர்கிறது.பந்தலுார் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களிலும், முதியோருக்கு பிதர்காடு பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கியில்பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் வீடு, வீடாக சென்று பென்ஷன் வழங்கியதுடன் பின்னர், தபால் நிலையங்களில் பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தற்போது, அந்த நிலை மாறி முகவர்கள் மூலம் வழங்கப்படும் நிலையில், பென்ஷன் கொடுப்பதற்கு குறிப்பிட்ட இடம் இல்லாததால், மாதம் தோறும் ஒவ்வொரு பகுதியிலும் முதியோர் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

இடம் இன்றி அலைகழிப்பு

இந்நிலையில், நேற்று, 'பந்தலுார் பஜாரில் உள்ள தனியார் மண்டபத்தில் வழக்கம்போல் பென்ஷன் வழங்கப்படும்,' என, கருதி முதியோர், 100க்கும் மேற்பட்டோர் அங்கு முகாமிட்டனர். அங்கு வேறு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றதால், பென்ஷன் வழங்க இடம் இன்றி முதியோர் சாலை ஓரத்தில் அமரும் சூழல் ஏற்பட்டது.இது குறித்து, கவுன்சிலர் ஜாபீர் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் கந்தசாமி, ரவி உள்ளிட்டோர் தாசில்தாரருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தாசில்தார் அலுவலகத்தில் ஒரு வளாகம் ஒதுக்கி தரப்பட்டு, முதியோர் அனைவரும் அங்கு வரவழைக்கப்பட்டு பென்ஷன் வழங்கும் பணி நடந்தது. காலையில் உணவு உட்கொள்ளாமல் பென்ஷன் வாங்கி செல்லலாம் என்ற ஆவலில், வந்து நீண்ட நேரம் காத்திருந்த முதியோர் சிலர் மயக்கம் அடையும் சூழலும் ஏற்பட்டது. மக்கள் கூறுகையில், 'முதியோர் சிரமம் இன்றி பென்ஷன் தொகை பெற்று கொள்ளும் வகையில், அந்தந்த கிராமப் பகுதியில் உள்ள இடத்தை தேர்வு செய்து, பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி