ஓணம் தொடர் விடுமுறை: சுற்றுலா பயணிகள் கூட்டம்: ஊட்டி, கூடலுாரில் வாகன நெரிசலால் போலீசார் திணறல்
ஊட்டி; கேரளாவில் ஓணம் தொடர் விடுமுறை காரணமாக, ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஓணம் பண்டிகையுடன், கேரளாவில் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகை இரு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி மற்றும் ஷூட்டிங் மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. காலை முதல், மாலைவரை இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் இயற்கை காட்சிகளை கண்டுக்களித்து குதுாகலம் அடைந்தனர். ஊட்டி நகரின் முக்கிய சாலைகளில், சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. இதேபோல, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் உள்ள ஏரியில், படகு சவாரி செய்ய அதிகம் ஆர்வம் காட்டினர். குன்னுார்- ஊட்டி இடையே மலை ரயிலிலும் பயணம் செய்ய ஆர்வம் காட்டினர். குளு, குளு காலநிலையால், சுற்றுலா மையங்கள் களை கட்டியுள்ளது. * கூடலுார் வழியாக, ஊட்டியில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு கேரளா சுற்றுலா பயணிகள் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக, கூடலுார் நகரில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழக -கேரளா எல்லையான நாடுகாணி நுழைவுவரி சோதனை மையம்; ஊட்டி தேசிய நெடுஞ்சாலை சில்வர் கிளவுட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, இ--பாஸ் சோதனை மற்றும் பசுமை வரி வசூல் மையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். போக்குவரத்து சீரமைக்கும் பணியில் போலீசார் திணறினர்.