500 அடி பள்ளத்தில் கார் உருண்டு ஒருவர் பலி
கோத்தகிரி: கோத்தகிரி அருகே, 500 அடி பள்ளத்தில் கார் உருண்டு ஒருவர் பலியானார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கெட்டிக்கம்பை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 50. ஊர் தலைவரான இவர், பசு மாடுகளை வளர்ப்பதுடன், விவசாயம் செய்து வந்தார். நேற்று மாலை கோத்தகிரி கொணவக்கரை பகுதியில், பசுமாடு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல்படி, கெட்டிக்கம்பை பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவரது காரில் கொணவக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது, கன்னவரை சோலை என்ற இடத்தில், குறுகலான வளைவில் கார் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து, 500 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டனர். படுகாயமடைந்த டிரைவர் சந்திரன், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கோத்தகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.