உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி; மறியலில் ஈடுபட்ட 10 பேர் கைது

கூடலுார்; கூடலுார் அருகே, காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த நிலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, 10 பேரை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி, பெரியார் நகரை சேர்ந்த சம்சுதீன் (எ) மெகபூப், 38, தனியார் எஸ்டேட்டில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். அதே எஸ்டேட்டில் டெல்லோஸ் பகுதியை சேர்ந்த செல்லதுரை, கள அலுவலராக பணியாற்றி வருகிறார். இருவரும், நேற்று காலை, 7:00 மணிக்கு ஸ்கூட்டரில், 'குயின்ட்' சாலை வழியாக, எஸ்டேட் நோக்கி சென்றனர். டி.ஆர்.சி., காபி தோட்டம் அருகே, திடீரென, குட்டியுடன் சாலைக்கு வந்த யானை, இவர்களை கீழே தள்ளிவிட்டு, ஸ்கூட்டரை சேதப்படுத்தி சென்றது. கீழே விழுந்து அடிபட்டு உயிருக்கு போராடியவர்கள், கூடலுார் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் மெகபூப் உயிரிழந்தது தெரியவந்தது. தப்பிய செல்லதுரைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 'காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, அப்பகுதியினர், 9:55 மணிக்கு ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம், கேரளா, கர்நாடக இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட கூடுதல் எஸ்.பி., மணிகண்டன், கூடலுார் டி.எஸ்.பி., (பொ.,) ஜெயபால், இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பயன் ஏற்படவில்லை. தொடர்ந்து, 10 பேரை போலீசார் கைது செய்தனர். காலை, 10:40 மணிக்கு போக்குவரத்து சீரானது. அப்போது, அங்கு வந்த, கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன், பூவேலி பேரூராட்சி துணை தலைவர் சகாதேவன் உள்ளிட்டோர், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கைது செய்தவர்களை விடுவிப்பதாக, போலீசார் உறுதி அளித்ததால், சுமூக தீர்வு ஏற்பட்டது. மக்கள் கூறுகையில்,' யானை- மனித மோதலுக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை