கூடலுார் மருத்துவமனையில் 4 டாக்டர்கள் மட்டுமே பணி
கூடலுார் : கூடலுார் தாலுகா அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும், டாக்டர்கள் பற்றாக்குறையால், நாள்தோறும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.நீலகிரி மாவட்டம், ஊட்டியில், அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை திட்டம் அறிவிக்கப்பட்ட பின், கூடலுார் மக்களின் கோரிக்கையை ஏற்று, 2022ல் கூடலுார் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. உயர் அதிகாரிகள், 'மாவட்ட மருத்துவமனைக்கு 40 டாக்டர்களை சில மாதங்களில் நியமிக்க அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தனர். எனினும், இதுவரை நிறைவேற்றப்படவில்லை.கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக, தலைமை டாக்டர் உட்பட, நான்கு டாக்டர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். இந்நிலையில், இங்கு நாள்தோறும், 200 முதல் 600 புறநோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுள்ள, நான்கு டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், டாக்டர்களும் மிகுந்த சிரமப்படுகின்றனர்.சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்றுச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.