உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கூடலுாரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பெயர் மட்டுமே மாற்றம்! டாக்டர்கள் பற்றாக்குறையால் சிரமத்தில் நோயாளிகள்

கூடலுாரில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு பெயர் மட்டுமே மாற்றம்! டாக்டர்கள் பற்றாக்குறையால் சிரமத்தில் நோயாளிகள்

கூடலுார்; கூடலுார் தாலுகா அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, மூன்று ஆண்டுகள் ஆகியும், தொடரும் டாக்டர்கள் பற்றாக்குறையால், நாள்தோறும் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.ஊட்டியில், அரசு மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை திட்டம் அறிவிக்கப்பட்ட பின், கூடலுார் மக்களின் கோரிக்கையை ஏற்று, 2022ல் கூடலுார் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்றப்பட்டது. அங்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டும் பணிகள் துவக்கப்பட்டு முடியும் தருவாயில் உள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் பேசிய உயர் அதிகாரிகள்,' மாவட்ட மருத்துவமனைக்கு மொத்தம், 28 அல்லது 40 டாக்டர் பணியிடங்களை ஒதுக்கி, சில மாதங்களில் நியமிக்க அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உறுதி அளித்தனர். இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

பணியில் 4 டாக்டர்கள் மட்டும்...

ஆனால், கடந்த காலங்களை போலவே டாக்டர்கள், ஊழியர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இங்கு தலைமை டாக்டர் உள்ளிட்ட இரு டாக்டர்கள் தவிர, பெரும்பாலான டாக்டர்கள் இரண்டு ஆண்டுகள் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஒப்பந்த காலத்தை ஓராண்டாக அரசு மாற்றியது. இதனை அடுத்து ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த முதுநிலை டாக்டர்கள் தங்களை விடுவித்து சென்றனர்.தொடர்ந்து, 7 டாக்டர்கள் மட்டும் பணியாற்றி வந்தனர். இதில், 3 டாக்டர்கள், ஓராண்டு ஒப்பந்த காலம் முடிந்தது, சென்று விட்டனர். இவர்களுக்கு மாற்றாக டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை. கடந்த ஆறு மாதத்துக்கு மேலாக, தலைமை டாக்டர் உட்பட, 4 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இங்கு நாள்தோறும், 200 முதல் 600 புற நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போதுள்ள சில டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், டாக்டர்களும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. அதிலும், சில நோய்களுக்கு சிறப்பு டாக்டர்கள் இல்லாததால், நோயாளிகள் ஊட்டி அல்லது கேரளா தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்கள் உயிருக்கு போராடும் அவலம் தொடர்கிறது. ஊட்டியில் கடந்த, 6ம் தேதி மருத்துவ கல்லுாரி அரசு மருத்துவமனையை முதல்வர் திறந்து வைத்த நிகழ்ச்சியில், 'மாவட்டத்தில் உள்ள அரசு டாக்டர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,' என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உறுதி யளித்தார். ஆனால், டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மாவட்ட அரசு மருத்துவமனையில் பழங்குடியினர், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள், தோட்ட தொழிலாளர்களுக்கு அனைத்து மருத்துவ சிகிச்சைகளிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், ஏமாற்றம் மட்டுமே மிச்சமாகி உள்ளது. இதனால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்,' என்றனர்.

விரைவில் டாக்டர்கள் நியமனம்...

கூடலுார், மாவட்ட மருத்துவமனை தலைமை டாக்டர் பரமேஸ்வரி கூறுகையில்,'' கூடலுார் தாலுகா மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனையாக மாற்றப்பட்ட பின்பு, அரசு ஒதுக்கிய, 31 கோடி ரூபாய் நிதியில் உட்கட்டமைப்பு பணி நடந்து வருகிறது. இங்குள்ள டாக்டர்கள் காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் கூடுதல் டாக்டர்கள் இங்கு நியமிக்கப்பட உள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ