யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க நடவடிக்கை; களத்தில் 4 கும்கிகள்; வன ஊழியர்கள்; மருத்துவக் குழுவினர்
கூடலுார்: கூடலுார் ஓவேலியில், 12 பேரை கொன்ற காட்டு யானையை, மயக்க ஊசிசெலுத்தி பிடிக்கும் பணி நேற்று நிறைவு பெறவில்லை. நீலகிரி மாவட்டம், கூடலுார் ஓவேலி பகுதியில், 'ராதாகிருஷ்ணன்' என்ற காட்டு யானை கடந்த சில ஆண்டுகளில், 12 பேரை தாக்கி கொன்றது. அதனை பிடிக்க வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விடுவதற்கான உத்தரவை, மாநில முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா, 15ம் தேதி வழங்கினார். கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு தலைமையில், வன ஊழியர்கள் யானையை பிடிப்பதற்கான நடவடிக்கை, 16ம் தேதி துவங்கினர். நேற்று காலை முதல் இப்பணியில். முதுமலை கும்கி யானைகள், வசிம், விஜய், சீனிவாசன், பொம்மன் ஆகியவை ஈடுபட்டுள்ளன. 'டிரோன் கேமரா' மூலம் காட்டு யானை இருப்பிடத்தை கண்டுபிடித்தனர். இரு கால்நடை மருத்துவர்கள் தலைமையில், மயக்க ஊசி தயார் செய்யப்பட்டு, காலை முதல், மாலை வரை ஊசி செலுத்தும் முயற்சி நடந்தது. எனினும், செலுத்த முடியவில்லை. மாலை, 6:30 மணியுடன் இப்பணி நிறைவு செய்யப்பட்டது. கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு கூறுகையில், ''யானையை பிடிக்கும் பணியில், 140 பேர் ஈடுபட்டுள்ளனர். மாலை வரை, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில், மயக்க ஊசி செலுத்த முயன்றும் முடியவில்லை. இதனால், நாளை (இன்று) இப்பணி மீண்டும் தொடரும்,'' என்றார்.
'டப்' கொடுக்குது 'ரோலெக்ஸ்'
கோவை மற்றும் போளுவாம்பட்டி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள விளைநிலங்கள், வீடுகளை 'ரோலெக்ஸ்' யானை, சேதப்படுத்தி வருகிறது. இதை பிடிக்க, 5ம் தேதி முதல், தாளியூர், யானைமடவு பகுதியில், வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு, கெம்பனுார் பகுதிக்குள் யானை வந்தது. இரவு, 11:00 மணிக்கு வனத்துறையினர், மயக்க மருந்து செலுத்த ரோலெக்சை துரத்தினர். தாளியூர், யானைமடவு வன எல்லைப்பகுதி அருகே சென்றதும், வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். ஆனால், யானை திடீரென அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இரவு நேரம் என்பதால், யானையை பின்தொடர முடியவில்லை. அதன்பின், டிரோன் தெர்மல் கேமராவில் பார்த்தபோது, ரோலெக்ஸ், ஒரு யானை கூட்டத்துடன் இருப்பது தெரியவந்தது. நேற்று அதிகாலை, வெளியே வந்த ரோலெக்ஸ், கெம்பனுார் பகுதியில் உள்ள தோட்டத்தில் புகுந்து சேதம் ஏற்படுத்தி, அட்டுக்கல் வனப்பகுதிக்குள் சென்றது. மாலை வரை வெளியே வரவில்லை. வனத்துறையினர் கூறுகையில், 'மயக்க ஊசி செலுத்திய போது, எதிர்பாராதவிதமாக அடர் வனப்பகுதிக்குள் சென்றது. மயக்க மருந்து வீரியம், 3 மணி நேரத்துக்கும் குறைவாகவே இருக்கும். தற்போது, யானை நல்ல நிலையில் உள்ளது.கண்காணித்து வருகிறோம்,' என்றனர்.