உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஹிந்துக்களுக்கு சொந்தமான மயான இடம்; மாற்று மதத்தினருக்கு ஒதுக்க எதிர்ப்பு

ஹிந்துக்களுக்கு சொந்தமான மயான இடம்; மாற்று மதத்தினருக்கு ஒதுக்க எதிர்ப்பு

ஊட்டி: ஹிந்துக்களுக்கு சொந்தமான மயானத்தை மாற்று மதத்தினருக்கு ஒதுக்க கூடாது, என,வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மனு கொடுத்தனர். நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபை உட்பட பத்துக்கும் மேற்பட்ட அமைப்பினர், ஹிந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில்; ஊட்டி அடுத்த மஞ்சனக்கொரை மினிக்கி சோலை ஹிந்து மயானம் தனிநபரால் நூறு வருடங்களுக்கு முன்பு ஹிந்துக்களின் மயான வசதிக்கு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 5000 குடும்பங்கள் 100 வருட காலமாக இதை மயானமாக பயன்படுத்தி வருகிறோம். இந்த மயான நிலத்தில் குறிப்பிட்ட பகுதியை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க நகராட்சி தரப்பில் தடை இல்லை என, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த மயான பூமி தனி நபரால் ஹிந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஹிந்து சமுதாய மக்களை தவிர மாற்று மதத்தினருக்கு இடம் கொடுக்க முடியாது. எனவே, இந்த மயான இடத்தில் ஒரு பகுதியை கிறிஸ்தவர்களுக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். நகராட்சி எல்லைக்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள வேறு அரசு நிலத்தை மற்ற மதத்தினரின் மயானத்திற்கு ஒதுக்கலாம். மேலும் தற்போது ஹிந்துக்கள் பயன்படுத்தி வரும் மயானத்தின் அருகிலுள்ள காலி இடத்தில் மயானத்திற்கு வரும் வாகனங்களை நிறுத்த வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ