உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / பல்லாங்குழி சாலை: நாள்தோறும் அவதிப்படும் மக்கள்

பல்லாங்குழி சாலை: நாள்தோறும் அவதிப்படும் மக்கள்

கோத்தகிரி ; கோத்தகிரி அருகே, கோவில் மேடு பல்லாங்குழி சாலையில் மக்கள் அவதிப்படுகின்றனர்.ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, ஒன்னதலை - பில்லிக்கம்பை கோவில் மேடு இடையே, இணைப்பு சாலை அமைந்துள்ளது. இந்த சாலையை, ஒன்னதலை, பில்லிக்கம்பை மற்றும் கோவில் மேடு உட்பட, பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.குறிப்பாக, பில்லிக்கம்பையில் உள்ள, அரசு மேல்நிலை பள்ளி, ரேஷன் கடை மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் சென்று வருவோர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.தவிர, நுாற்றுக்கணக்கான விவசாயிகள், இடுப்பொருட்களை இந்த சாலை வழியாக கொண்டு சென்று வருகின்றனர். மிகவும் முக்கியமாக விளங்கும் இச்சாலை, கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது.இதனால், சாலையின் நடுவே குழி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மழை பெய்து வந்து நிலையில், குழியில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகனங்கள் மற்றும் மக்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது.'இச்சாலையை சீரமைக்க வேண்டும்,' என, மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. அடுத்த மாதம், ஹெத்தையம்மன் திருவிழா நடக்க உள்ள நிலையில், பக்தர்களின் நலன் கருதி, இச்சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்படுகிறது. இதனால், நுாற்றுக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக சென்று வர உள்ள நிலையில், சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ