பந்தலுார் பஜார் பகுதி சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் பாதிப்பு
பந்தலுார்; 'பந்தலுார் பஜார் சாலையை அகலப்படுத்தி, வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. தமிழக- கேரளா சாலையில் பந்தலுார் பகுதி அமைந்துள்ளது. இதனால், இரு மாநில வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதுடன், உள்ளூர் வாகனங்களும் பயணிக்கின்றன. ஆனால், சாலை ஓரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளதுடன், தள்ளுவண்டிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகளும் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால், பல்வேறு தேவைகளுக்காக பந்தலுார் பகுதிக்கு வருபவர்கள், தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்தி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. சாலையின் இரண்டு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தி செல்வதால், வேறு வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், அவசர நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் நோயாளிகளை ஏற்றி செல்லும் வாகனங்கள், செல்ல முடியாமல் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. சாலை ஓர ஆக்கிரமிப்பை அகற்றி, சாலையை சீரமைக்கவும், பாதசாரிகள் நடந்து செல்ல நடைபாதை அமைக்கவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.