பட்டம் இதழால் மொழித்தேர்வு கேள்வித்தாள் தயாரிக்கலாம்; வினாடி - வினாவில் அசத்திய பள்ளி மாணவர்கள்
குன்னுார்; 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் சார்பில், 'பதில் சொல் ; பரிசை வெல்' எனும், வினாடி -வினா போட்டியில், குன்னுார் ஹோலி இன்னசென்ட்ஸ் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி மாணவியர் அசத்தினர்.'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 'வினாடி - வினா விருது, 2024--25 ' போட்டி நடத்தப்படுகிறது.நடப்பாண்டின் வினாடி-வினா போட்டி 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை 'இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி' சார்பில், பள்ளிகளில் நடந்து வருகிறது. அதில், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கரம் கோர்த்துள்ளது. கோ-ஸ்பான்சராக சத்யா ஏஜன்சி இணைந்துள்ளது.இதில், பள்ளி அளவில் வினாடி- வினா மாணவர்களுக்கான போட்டியில் இருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளி அளவில் இறுதிப்போட்டி நடத்தப்படும். போட்டியின் நிறைவில் பரிசுகள் வழங்கப்படுகிறது.இதன்படி, நேற்று, குன்னுார் வெலிங்டன் ஹோலி இன்னசென்ட்ஸ் பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரியில் நடந்த, வினாடி- வினா போட்டியில் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வை, 30 பேர் எழுதினர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது.தொடர்ந்து, மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 9ம் வகுப்பு மாணவியர் சாதனா, ஷபியா முதல் இரு இடங்களை பிடித்தனர். இவர்கள் பள்ளிகளுக்கு இடையே, கோவையில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரி ஆவியாவாஸ் பரிசுகள் மற்றும் கேடயம் வழங்கினார். ஆசிரியைகள் உமா மகேஸ்வரி, கார்த்திகா, சோபியா பால் ஆகியோர் உடனிருந்தனர். மொழித்தேர்வுக்கு பயன்
தமிழாசிரியர் உமா மகேஸ்வரி கூறுகையில்,'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப் பான, 'பட்டம்' மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாணவர்களுக்கு வாசித்தல் திறனை அதிகரிக்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும். தற்போது உள்ள மாணவர்களை விட, மேலும் நிறைய மாணவர்கள் பயன்பெறும் வகையில், உற்சாகப்படுத்தி பட்டம் இதழை படிக்க வைத்து வருகிறோம். தமிழ்மொழி தேர்வு, 2ம் தாள் மொழி பயிற்சிக்கு பட்டம் இதழில் வரும் விபரங்களை படிக்க வைத்து, கேள்விதாள் தயாரித்து வழங்குவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது,'' என்றார்.
'மொபைல் போன்' ஆதிக்கம் குறையும்
பள்ளி முதல்வர் ஆவியாவாஸ் கூறுகையில்,''பட்டம் இதழ் மாணவர்களின் வாசித்தல் மற்றும் அறிவு திறனை வளர்க்க ஏதுவாக உள்ளது. தற்போதைய 'மொபைல் போன்' ஆதிக்கத்தின் பிடியில் சிக்கி பாதிப்புகளை தவிர்க்கவும் ஏதுவாக உள்ளது. படிக்க மாணவர்கள் துவங்கியதும் ஊக்கம் அளிக்கிறது, மொழி பயிற்சிக்கு மாணவர்களை தயார் செய்ய பட்டம் மிகுந்த பயன் அளிக்கிறது,'' என்றார்.
தேர்வுக்கு அடித்தளம்
ஷபியா கூறுகையில், ''பட்டம் இதழில் விளையாட்டு, அறிவியல், பொது அறிவு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் கொடுப்பதால் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நமது வருங்கால வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் உள்ளது. குறிப்பாக, விளையாட்டில் சாதிப்பதற்கான வழிகள், டாக்டராக செல்வது உள்ளிட்ட தேர்வுகளுக்கு இவை அடித்தளம் அமைக்கிறது.