கிராமத்திற்குள் நுழைந்த காட்டெருமையால் மக்கள் அச்சம்
மஞ்சூர் ; மஞ்சூர் அருகே கிராமத்திற்குள் நுழைந்த ஒற்றை காட்டெருமையால் மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.மஞ்சூர் அருகே, குந்தா துானேரி கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. கிராமத்தை ஒட்டி, மட்டக்கண்டி, பாக்கோரை, கீழ்குந்தா, கொட்டரக்கண்டி உள்ளிட்ட பகுதிகளை சுற்றி அடர்ந்த தேயிலை தோட்டம் உள்ளது.சமீபகாலமாக காட்டெருமை, சிறுத்தை, கரடி, குரங்கு தொல்லை அதிகரித்துள்ளது. வன விலங்குகள் அடிக்கடி குடியிருப்புகளில் நுழைவதால் குடியிருப்பு வாசிகள், தோட்ட வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.நேற்று காலை, 7:30 மணியளவில் குந்தா துானேரி கிராமத்தை ஒட்டி தேயிலை தோட்டத்தில் உலா வந்த காட்டெருமை திடீரென குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. இதனை பார்த்த மக்கள் பீதியுடன் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.சிறிது நேரம் கிராமத்தில் உலா வந்த காட்டெருமை மட்டக்கண்டி சாலை வழியாக வனப்பகுதிக்கு சென்றது.மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் வனத்துறையினர் ஆய்வு செய்து, வன விலங்குகள் அடிக்கடி கிராமத்திற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.