நிதி ஒதுக்கி 18 மாதங்கள் கடந்தும் பணி செய்ய மறுப்பு: ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்
பந்தலுார்: சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கருத்தாடு, தட்டாம்பாறை கிராமங்கள் அமைந்துள்ளன. வனத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த பகுதியில், பகல் நேரங்களிலும் யானைகள் வந்து செல்லும் நிலையில், இந்த பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அதில், கருத்தாடு முதல் தட்டாம்பாறை வரை, 1,100 மீட்டர் மண் சாலையாக உள்ளது, இதனால், வாகனங்கள் வந்து செல்ல முடியாத நிலையில், இப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் தினசரி வனவிலங்கு அச்சத்துடன் நடந்து செல்லும் அவலம் தொடர்கிறது. சாலையை சீரமைக்க வலியுறுத்திய நிலையில், சாலை வனப்பகுதிக்குள் செல்வதாக கூறி, சீரமைக்க வனத்துறையினர் தடை விதித்தனார். இந்நிலையில், 100 மீட்டர் தூரம் சிமென்ட் சாலையாக மாற்றம் செய்யும் வகையில், கடந்த, 18 மாதங்களுக்கு முன்னர் ஊராட்சி ஒன்றியத்தின் மூலம், 5 லட்சம் ரூபாய் இந்திய ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், சீரமைப்பு பணி மேற்கொள்ளாத நிலையில், கிராம மக்கள் இணைந்து, 8,000 ரூபாய் செலவு செய்து சாலையை சீரமைக்கும் வகையில் முற்கட்டபணிகளை செய்து கொடுத்தனர். ஆனால், ஒப்பந்ததாரர் தன்னிடம், பணி மேற்கொள்வதற்கு தேவையான தளவாட பொருட்கள் இல்லை என்று கூறி, கடந்த 18 மாதங்களாக இழுத்தடிப்பு செய்து வருகிறார். இந்நிலையில், அப்பகுதி மக்கள் வாழ்வாதார இயக்க நிர்வாகிகள் சிபி, அம்சா ஆகியோர் தலைமையில்,சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து கோரிக்கை குறித்த மனு ஊராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. அங்கு வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், சாஜி, தினேஷ்குமார் அதிகாரிகளிடம் நடத்திய பேச்சு வார்த்தையில், 'அக்.,3-ம் தேதி சாலை சீரமைப்பு பணி துவக்கப்படும்,' என, உறுதி அளித்தனர். அதனை ஏற்று கொண்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.