பொங்கல் வேட்டி, சேலை கிடைக்காமல் திரும்பி சென்ற மக்கள்
குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், இலவச வேட்டி, சேலை மற்றும் கரும்பு, பச்சரிசி ஆகிய அரசின் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சில கடைகளில், வேட்டி சேலை மற்றும் கரும்பு உரிய முறையில் கிடைப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது. அதில், கேட்டில் பவுன்ட், சிங்காரத்தோப்பு ரேஷன் கடைகளில் நேற்று பொங்கல் பொருட்களை வாங்க வந்த கார்டுதாரர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்டவை கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். சிலருக்கு கரும்பு கிடைக்கவில்லை.இது தொடர்பாக, மக்கள் கூறுகையில்,''2023ல், ஏலக்காய், நெய், முந்திரி உட்பட 21 பொருட்கள், வழங்கப்பட்டது. கடந்த ஆண்டில், பொங்கல் பண்டிகையின் போது, 1000 ரூபாயுடன், பச்சரிசி, கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் கொடுக்காத நிலையில், கொடுக்க அறிவித்த, 3 பொருட்கள் கூட முறையாக வழங்குவதில்லை,''என்றனர்.வட்ட வழங்கல் அதிகாரிகள் கூறுகையில்,' அப்பகுதியில் உடனடியாக ஆய்வு செய்து வழங்கப்படும். பொருட்கள் வழங்கவில்லை எனில், ரேஷன் கடையின் முன்பு எழுதி வைக்கப்பட்டுள்ள வட்ட வழங்கல் அலுவலக புகார் எண்ணில் அழைத்து தெரிவிக்கலாம்; விடுபட்டவர்கள் வரும், 30ம் தேதிக்குள் பொருட்களை வாங்கலாம்,' என்றனர்.