மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹில் அலவன்ஸ் நிதி அமைச்சருக்கு மனு
குன்னுார்: 'நீலகிரியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹில் அவவன்ஸ் மீண்டும் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னுார் அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர் நல சங்கம் பொதுசெயலாளர் அசோகன், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பிய மனு : நீலகிரி மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மலைவாழ் இழப்பீடு மற்றும் மோசமான காலநிலை அலவன்ஸ் பெற தகுதி உடையவர்களாக இருந்தனர். 2017ல் நிதி அமைச்சரகத்தின் மூலம் ஹில் அலவன்ஸ் ரத்து செய்யப்பட்டது. ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த அலவன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழ்க்கை செலவு மற்றும் வானிலை நிலைமைகள் மாறுபடுவதால் அனைத்து ஊழியர்களுக்கும் கடினமான இடங்களுக்கான அலவன்ஸ் வழங்க வேண்டும். நீலகிரியில் தொழிற்சாலை பிரிவு தபால் ஊழியர்கள் பாதுகாப்புத்துறை ரயில்வே போன்றவற்றில் பணியமர்த்தப்படும் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த மாவட்டத்தை கடினமான இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கவும், நீலகிரியில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹில் அலவன்ஸ் மீண்டும் வழங்கவும், மத்திய, மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வை தீர்க்கவும் வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.