சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கும் மர துண்டுகள்
ஊட்டி; 'சாலையோரத்தில் கேட்பாரற்று கிடக்கும் மரத் துண்டுகளை அகற்றி சம்பந்தப்பட்ட துறையினர் அரசுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், 6 தாலுகா பகுதிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் சாலையோரங்களில் கற்பூர மரங்கள் ஓங்கி வளர்ந்து உள்ளன. நுாறு ஆண்டு பழமை வாய்ந்த இந்த மரங்கள், பருவ மழை சமயத்தில் பலத்த காற்று வீசும் போது சாலையின் குறுக்கே விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குறுக்கே விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத் துறையினர், 'பவர்ஷா' உதவியுடன் அறுத்து அகற்றி சாலை ஓரத்தில் வைக்கின்றனர். அதன்படி , ஊட்டி- -மஞ்சூர் சாலை குன்னுார், கூடலுார், இத்தலார் உள்ளிட்ட பிரதான சாலை மற்றும் கிராமப்புற சாலைகளில் கற்பூர மரங்கள் அறுத்து மர துண்டுகளாக சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ளன. பருவமழைக்கு விழுந்த மரங்கள் அனைத்தும் வனத்துறைக்கு சொந்தமானது. இந்த மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. மாவட்ட முழுவதும் இது போன்ற மரங்களை சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள், கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் பயன்படுத்தும் வகையில், ஏலம் விட்டு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.