நீலகிரி புத்தகத் திருவிழாவில் கோளரங்கம் நிகழ்ச்சி கலக்கல்
ஊட்டி: ஊட்டியில், 4வது புத்தகத் திருவிழா - நடந்து வருகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கோளரங்கம் மற்றும் அறிவியல் அரங்கு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் பங்கேற்கும் புத்தகத் திருவிழாவில், கோளரங்கம் நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதரவை பெற்று வருகிறது. கோளரங்கம் நிகழ்ச்சியில், 25 ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏற்பட்ட, ஐந்தாவது பேரழிவை '3டி எபக்ட்' உடன், தத்ரூபமாக விளக்கப்படுகிறது. அந்தப் பேரழிவின்போது ஏற்பட்ட பேரிடர்கள், டைனோசர் போன்ற உயிரினங்களின் அழிவு போன்ற நிகழ்வுகள் மாணவர்கள் இடையே திரில்லை ஏற்படுத்துகிறது. இதன் வாயிலாக மாணவர்களுக்கு விரைவில் வரப்போகும் பூமியின் ஆறாவது அழிவு எவ்வாறு இருக்கும் என்ற புரிதல் ஏற்படுகிறது. பூமியின் ஆறாவது அழிவு, இதுபோன்ற பிரளயங்கள் ஏற்படாமல் அமைதியாக வைரஸ்கள் போன்ற நுண்ணுயிர்களால் ஏற்படலாம் என, விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். புவி வெப்பம், காலநிலை மாற்றம் போன்ற நிகழ்வுகள், பூமியின் எதிர்கால அழிவுக்கு சாட்சியாக இருக்கின்றன. மனித குலம், தற்போது இரண்டு பூமிகள் தரும் ஆற்றலின் அளவை உபயோகித்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற செய்திகள், இந்த கோளரங்கத்தின் வாயிலாக மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ கூறினார். மேலும், அறிவியல் இயக்கம் சார்பில், டெலஸ்கோப், புத்தக ஸ்டால், சூரியனை நோக்குதல் போன்ற பல நிகழ்ச்சிகளும் இடம் பெற்றுள்ளன.