உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஆடம்ஸ் நீரூற்றின் அமைப்பை மாற்ற திட்டம்? காந்திசிலை அருகே பூங்கா இடிக்கப்பட்டதால் அதிருப்தி

ஆடம்ஸ் நீரூற்றின் அமைப்பை மாற்ற திட்டம்? காந்திசிலை அருகே பூங்கா இடிக்கப்பட்டதால் அதிருப்தி

ஊட்டி; ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள, ஆங்கிலேயர் காலத்தின் ஆடம்ஸ் நீரூற்றின் அமைப்பை மாற்ற நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஊட்டியில் கடந்த, 2022ல் மே மாதம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்,''ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, ஊட்டி அரசு கலை கல்லுாரி, ஆடம்ஸ் நீரூற்று, கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட கட்டடங்களை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் போது, கட்டடங்களின் அமைப்பு மாறாமல் பார்த்து கொள்ள வேண்டும்,'' என்றார். பாரம்பரிய கட்டுமானங்களை பாதுகாக்க, 12 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார்.

ஆடம்ஸ் நீரூற்றுக்கு ஆபத்து?

இந்நிலையில், ஊட்டியின் அடையாளமாக உள்ள, ஆடம்ஸ் நீரூற்றின் அமைப்பை மாற்ற நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, அங்குள்ள சிறிய பூங்காவை, நேற்று முன்தினம் நள்ளிரவு பொக்லைன் பயன்படுத்தி இடித்துள்ளனர். இதற்கு, நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால்; ஊட்டி சிட்டிசன் பாரம் செயலாளர் விஸ்வநாத்; காங்., கட்சியின் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஊட்டி சிட்டிசன் பாரம் செயலாளர் விஸ்வநாத் கூறுகையில், ''ஆடம்ஸ் நீரூற்று ஊட்டியின் அடையாளமாக உள்ளது. 150 ஆண்டு பழமையான முக்கோண வடிவத்தை இடிக்க நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுத்துள்ளது. திட்டத்தை மாற்ற கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். இதனை பாதுகாக்க, பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.

பழமை மாறாமல் பாதுகாக்கணும்

இப்பகுதியில் நேற்று மாலை எம்.எல்.ஏ., கணேசன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் கார்த்திக், நகர செயலாளர் நித்ய சத்யா உள்ளிட்ட காங்., நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்டனர். எம்.எல்.ஏ., கணேசன் நிருபர்கள் கூறுகையில்,'' ஊட்டி எம்.எல்.ஏ.,வுக்கு தெரியாமல் இது போன்ற நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதை காங்., கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஊட்டியின் அடையாளமான ஆடம்ஸ் நீரூற்று உள்ளது. 'இதனை பழமை மாறாமல் பாதுகாக்க வேண்டும்,' என, மாநில முதல்வர் ஏற்கனவே கூறியுள்ளார். மேற்கொண்டு இங்கு பணி நடந்தால் காங்., சார்பில் போராட்டம் நடத்தப்படும்,''என்றார்நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தல் படி, அங்குள்ள சிறிய பூங்காவை அகற்றி உள்ளோம். பிற பணிகள் துவக்கப்படவில்லை,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை