வனத்தில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் : அகற்றும் பணியில் ஈடுபட்ட வன குழுவினர்
கூடலுார்: கூடலுார் வனப்பகுதியில் இயற்கை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வன ஊழியர்கள் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். கூடலுர் வனக்கோட்டத்தில் வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற, வனத்துறை சார்பில், பிளாஸ்டிக் அகற்றும் துாய்மை இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதன், சார்பில், வனப்பகுதிகள், நீர்நிலைகள், தடுப்பணைகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் அகற்றும் பணியில், வன ஊழியர்கள் ஈடுபட்டனர். கூடலுார், ஓவேலி, நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு வனச்சரகர்கள் ராதாகிருஷ்ணன், வீரமணி, ரவி, சஞ்சீவ், அய்யனார், ரவி (பிதர்காடு) தலைமையில், வன ஊழியர்கள், உள்ளாட்சி மன்ற ஊழியர்களுடன் வனப்பகுதிகள், நீர்நிலைகள் தடுப்பு அணைகளில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். அகற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், அந்தந்த உள்ளாட்சி மன்ற அமைப்புகளிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் கூறுகையில், 'திறந்த வெளிகள், வனப்பகுதிகள், நீர்நிலைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் வனத்துக்கும், வனவிலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. வனச் சுற்றுச் சூழலை பாதுகாக்க வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும். சுற்றுச் சூழல், மண் மற்றும் வன வளத்தை பாதுகாக்க, வனத்துறை எடுத்துள்ள முயற்சிக்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்,' என் றனர்.