உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்; 16 பெண் போலீசார் பொறுப்பாளர்களாக நியமனம்

நீலகிரியில் போலீஸ் அக்கா திட்டம் துவக்கம்; 16 பெண் போலீசார் பொறுப்பாளர்களாக நியமனம்

ஊட்டி : நீலகிரியில் 'போலீஸ் அக்கா' திட்டம் துவக்கப்பட்டு, 16 பெண் போலீசார் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.கோவையில், 2022ல் துவக்கப்பட்ட, 'போலீஸ் அக்கா' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் பெண் போலீசார் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் தொடர் அலுவலராக இருப்பார். மாணவிகள் இந்த பெண் போலீசாருடன் பழகி குடும்பத்தினர், ஆசிரியர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிந்து கொள்ள முடியாத பிரச்னைகளை பகிர்ந்து கொண்டு தீர்வு காணலாம்.இத்திட்டத்துக்கு கல்லுாரி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் செயல்படுத்த அரசு அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், நீலகிரி போலீசார் சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி, ஊட்டி அரசு கலை கல்லுாரி உட்பட, 16 அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில் முதற்கட்டமாக 'போலீஸ் அக்கா' திட்டம் துவங்கப்பட்டது.ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்த இதற்கான நிகழ்ச்சியில், மாவட்ட எஸ்.பி., நிஷா திட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது: நீலகிரியில், இன்று (நேற்று) கல்லுாரி மாணவியர்களின் பாதுகாப்புக்காக, போலீஸ் அக்கா திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 16 பெண் போலீசார் இதற்கென நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கல்லுாரிகளில் இரு வாரத்திற்கு ஒருமுறை சென்று 'போக்சோ' சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்பு, சைபர் கிரைம், சாலை பாதுகாப்பு, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவர். மாணவிகள் தங்களால் வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாத பிரச்னைகளை பெண் போலீசாரிடம் தெரிவிக்கலாம்.வரும் நாட்களில் கல்லுாரி நிர்வாகங்களுடன் இணைந்து தற்காப்பு குறித்த வகுப்புகளும் நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு கல்லுாரி வளாகத்திலும் 'போலீஸ் அக்கா'வை தொடர்பு கொள்வதற்கு வசதியாக 'கியூ.ஆர் 'குறியீடுடன் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்கும். அதனை ஸ்கேன் செய்து அவர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், கூடுதல் எஸ்.பி., சவுந்திரராஜன், கல்லுாரி முதல்வர்கள், நிர்வாகிகள், பெண் போலீசார் உட்பட பலர் பங்கேற்றனர்.

25 ஆயிரம் பேர் பதிவிறக்கம்!

பெண்கள் பாதுகாப்பிற்கென காவல் உதவி என்ற செயலி உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வுகுறைவாக இருந்தது. 2000க்கும் அதிகமானோர் இதனை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் விளைவாக, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை