விதிகளை மீறி பார்க்கிங் கட்டண வசூல்; ஒப்பந்ததாரரை எச்சரித்த போலீசார் ஒப்பந்ததாரரை எச்சரித்த போலீசார்
ஊட்டி; ஊட்டியில் விதிகளை மீறி 'பார்க்கிங்' கட்டணம் வசூலித்த ஒப்பந்ததாரரை போலீசார் எச்சரித்தனர். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணியர், கமர்ஷியல் சாலையில் நடந்து சுற்றிபார்க்கும் வகையில், சேரிங்கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை, சாலையோரம் வாகனங்கள் நிறுத்த தடை விதித்து, 'வாக்கிங் வே' வசதி ஏற்படுத்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டிகள், உள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி, ஊட்டி நகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு, இரு சக்கரம், நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டு, 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சேரிங்கிராஸ் மத்திய கூட்டுறவு வங்கி, பாரதியார் வணிக வளாகம் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி, பல்வேறு தேவைகளுக்கு உள்ளூர் மக்கள் சென்று வரும் வகையில் போலீசார் 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தி கொடுத்தனர். 'குறிப்பிட்ட பகுதியில் நிறுத்தும் உள்ளூர் இருசக்கர வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது,' என, ஆரம்பம் முதல் உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரின் ஊழியர்கள், போலீசாரின் அறிவுரையை மீறி, கட்டணம் வசூலித்து வருவதாக உள்ளூர் மக்கள் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், பி1 இன்ஸ்பெக்டர் முரளிதரன், போக்குவரத்து எஸ்.ஐ., அருண் ஆகியோர் சம்பவ பகுதிக்கு வந்து, ஒப்பந்ததாரரை அழைத்து, 'போலீசார் ஏற்படுத்திய பார்க்கிங் பகுதிகளில், விதிகளை மீறி வாகனங்களை நிறுத்த சொல்லி கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்,' என, எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.