மகசூலுடன் விலையும் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலை மகசூல் அதிகரித்து வருவதுடன், விலையும் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தொழிலில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகளும், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடந்த சில வாரங்களாக, ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு, 29 முதல், 32 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதுவே, இதுவரை அதிகபட்ச விலையாக உள்ளது. தற்போது கிடைத்து வரும் விலை விவசாயிகளுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. தொழிலாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், தேயிலை தோட்டங்கள் ஈரம் கண்டு, மகசூல் கணிசமாக உயர்ந்து வருகிறது. விலையும் உயர்ந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மலை மாவட்ட சிறு விவசாயிகள் நலசங்க தலைவர் தும்பூர் போஜன் கூறுகையில், ''தற்போது கிடைத்து வரும் விலை, ஓரளவு ஆறுதலாக இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கு இந்த விலை போதுமானதாக இல்லை. எதிர்வரும் நாட்களில், விலை மேலும் ஏற்றம் அடைய வேண்டும். தொழிற்சாலைகளிலும், கலப்படம் இல்லாமல் தரமான தேயிலை துாள் உற்பத்தி செய்ய வேண்டும்,'' என்றார்.