ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி மீது தனியார் பைனான்ஸ் ஊழியர் தாக்குதல்
பந்தலுார்; கோவை மண்டல ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளராக இருப்பவர் தியாகராஜன்,44. இவர் நீலகிரி மாவட்டம் பந்தலுாரில் வசித்து வருகிறார். இவர் கடை நடத்தி வரும் நிலையில், அங்கு பணியாற்றும் பரமேஸ்வரி என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று திரும்ப செலுத்தி வருகிறார். நேற்று கடை ஊழியர் வெளியில் சென்றிருந்த நிலையில், கடன் வசூலிக்க வரும் நபர் கடனை திரும்ப செலுத்த கோரி கடைக்கு நான்கு முறை வந்துள்ளார். அப்போது, கடையிலிருந்த தியாகராஜன், 'வங்கி கணக்கு எண்ணை தருமாறும், அவர் வந்தவுடன் வங்கி கணக்கில் தொகையை செலுத்த கூறுகிறேன்,' எனவும் தெரிவித்துள்ளார். அதனை ஏற்க மறுத்த கடன் வசூலிக்க வந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டிய நிலையில், கடையை விட்டு வெளியே செல்லுமாறு தியாகராஜன் தெரிவித்துள்ளார். அப்போது, தியாகராஜன் மற்றும் அவரது மகனை கடன் வசூலிக்க வந்த நபர் கடுமையாக தாக்கியுள்ளார். தேவாலா போலீசார் விசாரிக்கின்றனர்.