மழைநீர் செல்ல அமைக்கப்பட்ட கல்வெட்டு சேதமானதால் சிக்கல்
கூடலுார்; கூடலுார் தேவாலா கைதக்கொல்லி அருகே, மழைநீர் சாலையை கடந்து செல்ல, அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டில் உள்ள சிமென்ட் குழாய்கள் சேதமடைந்துள்ளன. கூடலுார் நாடுகாணியில் இருந்து தேவாலா சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையில், மழைநீர் கடந்து செல்ல சிமென்ட் குழாய் பயன்படுத்தி கல்வெட்டு அமைத்துள்ளனர். இதன் மூலம் மழை நீர் எளிதாக சாலையை கடந்து வழிந்தோடியது. இச்சாலையில், கைதக்கொல்லி அருகே, கல்வெட்டின் மேல்பகுதி சேதமடைந்து, மழை நீர் வழிந்தோட, அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் குழாய் சேதமடைந்துள்ளது. அப்பகுதியில் வாகனம் செல்லாத வகையில், நெடுஞ்சாலை துறையினர் ரிப்பன் கட்டி உள்ளனர். ஆனால், இதுவரை அதனை சீரமைக்க நடவடிக்கை இல்லை. இவ்வழியாக செல்லும் கனரக வாகனங்களால், அப்பகுதி மேலும் சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கும் ஆபத்து உள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சேதமடைந்த கல்வெட்டு பகுதியை ஆய்வு செய்து, அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.