வயல்களில் காட்டு யானைகள் நுழையாமல் தடுக்க பாதுகாப்பு தாருங்கள்! பயிர் நஷ்டத்தை தவிர்க்க விவசாயிகள் வலியுறுத்தல்
கூடலூர்: - கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை முடியும் வரை, காட்டு யானைகள் வயல்களில் நுழையாமல் தடுத்து, பயிர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலுார் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கூடலூர், தொரப்பள்ளி குணில், புத்தூர்வயல், அல்லூர்வயல் பகுதி மக்கள், விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இப்பகுதிகள் முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இரவு நேரங்களில், இப்பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்தது. விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை தடுக்க, வனத்துறை சார்பில், முதுமலை வன எல்லையை ஒட்டி, பல கி.மீ., துாரத்திற்கு அகழி அமைத்துள்ளனர். துவக்கத்தில், காட்டு யானைகள் நுழைவது தடுக்கப்பட்டது. ஆக்ரோஷம் கொண்ட யானைகள் அகழியை சேதப்படுத்தி, இப்பகுதிக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தியது. சேதமான அகழிகளை வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு சீரமைத்தனர். தற்போது, சில பகுதிகளில் பராமரிப்பின்றி காணப்படும் அகழியை. சில காட்டு யானைகள் சேதப்படுத்தி விவசாய தோட்டத்திற்குள் நுழைந்து விவசாயி பயிர்களை நாசம்செய்கிறது. வன ஊழியர்கள், இரவு முழுவதும் கண்காணித்து தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், காட்டு யானைகள் நுழைவதை நிரந்தரமாக தடுக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். தீவிர கண்காணிப்பு இந்நிலையில், தற்போது இப்பகுதிக்கு வரும் காட்டு யானைகள், வயல்களில் நுழைந்து, அறுவடைக்கு தயாராகி வரும் நெற்கதிர்களை சேதப்படுத்தி உள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரிவதால் சேதப்படுத்தும் ஆபத்து உள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விவசாயி பாபு கூறுகையில், ''இப்பகுதியில் பாரம்பரியமாக நெல் விவசாயம் செய்து வருகிறோம். தொழிலாளர்களுக்கான சம்பளம், இடுபொருட்களின் விலை உயர்வு, காட்டு யானைகளின் பிரச்னை போன்ற காரணங்களால் நெல் விவசாயத்தில், ஆர்வம் குறைந்து வருகிறது. நடப்பாண்டு, எதிர்பார்த்த பருவமழை பெய்ததால், நெல் விளைச்சல் நன்றாக உள்ளது. அடுத்த மாதம் நெல் அறுவடை செய்ய உள்ளோம். முதுமலையிலிருந்து, அகழியை கடந்து வரும் காட்டு யானைகள் நெற்கதிர்களை சேதப்படுத்தி, நஷ்டத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த அகழியை சீரமைத்து, நெல் அறுவடை முடியும் வரை, காட்டு யானைகள் வயல்களுக்குள் நுழையாமல் தடுக்க வனத்துறை, நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' என்றார். வனத்துறையினர் கூறுகையில், 'காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைவதை தடுக்க, வன ஊழியர்கள் இரவு முழுவதும் கண்காணித்து யானைகளை விரட்டி வருகின்றனர். கண்காணிப்பு பணி மேலும் தீவிரப்படுத்தப்படும். மழைக்காலம் என்பதால் அகழியை சீரமைப்பதில் சிரமம் உள்ளது. மழை நின்றவுடன் அகழி சீரமைக்கப்படும்' என்றனர்.