உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / காட்டு யானைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்; பொது மக்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்பு

காட்டு யானைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்; பொது மக்கள் மறியல் : போக்குவரத்து பாதிப்பு

கூடலுார்; கூடலுார் அம்பலமூலா குடியிருப்பு பகுதியில், மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கோரி, மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலுார் ஸ்ரீமதுரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உலாவரும் காட்டு யானைகள், பகல் நேரங்களில் வனப்பகுதிகளில் ஓய்வெடுப்பதுடன், இரவில் மண்வயல், அம்பலமூலா, செமுண்டி, கொரவயல், தேன்வயல் குனில் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. வன ஊழியர்கள் அவைகளை தொடர்ந்து கண்காணித்து விரட்டி வருகின்றனர். எனினும், யானைகள் ஊருக்குள் நுழைவது நிரந்தரமாக தடுக்க முடியவில்லை. இதனால், மக்கள் வனத்துறையினர் மீது அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம், இரவு அம்பலமூலா பகுதியில் முகாமிட்ட காட்டு யானை, நேற்று, 9:00 மணிக்கு தேயிலை தோட்டம் வழியாக வந்தது. அவ்வழியாக நடந்து சென்ற பெண்கள் உட்பட சிலர் ஓடி உயிர்த்தப்பினர். தொடர்ந்து யானை வனப்பகுதிக்கு சென்றது. சம்பவத்தால் அச்சம் அடைந்த மக்கள், அம்பலமூலா சந்திப்பு பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடலுார் - மண்வயல் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் முத்துமாரி, இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத், வனச்சரகர் ராதாகிருஷ்ணன், பாலாஜி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் கூறுகையில், 'தொடரும் காட்டு யானைகள் பிரச்னைக்கு தீர்வு காண, தொரப்பள்ளி முதல் செம்பக்கொல்லி, இடையே அமைக்கப்பட்டுள்ள அகழியை சீரமைத்து, அதனை ஒட்டி சோலார் மின்வேலி அமைக்க வேண்டும்,' என்றனர். அதிகாரிகள் கூறுகையில்,'நாளை (இன்று) அம்பலமுலா பகுதியில், டி.எப்.ஒ., தலைமையில், கூட்டம் நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காணப்படும்,' என்றனர். அதனை ஏற்று, 11:30 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், இச்சாலையில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை