உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / கனமழைக்கு சாலையில் தேங்கிய மழை நீர்; சிரமப்பட்ட உள்ளூர் பொது மக்கள்

கனமழைக்கு சாலையில் தேங்கிய மழை நீர்; சிரமப்பட்ட உள்ளூர் பொது மக்கள்

ஊட்டி : ஊட்டி, கோத்தகிரியில் பெய்த கனமழைக்கு சாலையில் ஆங்காங்கே தேங்கிய மழைநீரால் மக்கள் சிரமப்பட்டனர். நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை எதிரொலியாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று மதியம், ஒரு மணி நேரம் கனமழை பெய்தது . சேரிங்கிராஸ் பகுதியில் மழை நீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லை. நொண்டி மேடிலிருந்து, ஆவின் சாலை வழியாக வழிந்தோடிய மழைநீர், சேரிங்கிராஸ் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீர் செல்ல வசதியில்லாததால், மழை நீர் அங்குள்ள பஸ் ஸ்டாப்பில் தேங்கியது. பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் சாலையில் தேங்கிய மழை நீரை கடந்து பஸ் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். குறிப்பாக , இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலையில் தேங்கிய மழை நீரை கடந்து செல்ல கடும் சிரமப்பட்டனர். 'ஊட்டியில் பஸ் ஸ்டாண்ட், ரயில்வேபாலம், லோயர் பஜார் சாலை,' என, ஆங்காங்கே மழை நீருடன் சாக்கடை கலந்த நீர் தேங்கி நின்றதால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டதால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு இடையே சாலையை கடந்து சென்றனர். பொதுமக்கள் கூறுகையில், 'ஊட்டி நகரில் கன மழை பெய்யும் போது மழை நீர் செல்ல போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பது வாடிக்கையாகி விட்டது. இது போன்ற அவலங்களால் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர். கோத்தகிரி, கோடநாடு மற்றும் கீழ் கோத்தகிரி பகுதிகளில், மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதனால், நீர் ஆதாரங்கள் நிறைந்தும், தேயிலை மற்றும் காய்கறி தோட்டங்களில் ஈரப்பதம் அதிகரித்து வருகிறது. நேற்று காலை, 10:00 மணியளவில் துவங்கிய மழை, இடைவிடாமல் மாலை, 5:00 மணி கடந்தும் நீடித்தது. நேற்று மாலை, 3:00 மணி நிலவரம் படி, கோத்தகிரியில், 18 மி.மீ., கோடநாட்டில், 17 மி.மீ., மற்றும் கீழ் கோத்தகிரியில், 15 மி.மீ., மழை பதிவானது. கிராமப்புறங்களில் இருந்து, நகரப்பகுதிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை, அரசு பஸ்களில் குறைந்திருந்தது. இந்த மழையால், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது. இதேபோல, மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை